திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.6 திருவையாறு
பண் - இந்தளம்
கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்
பாடல் வீணைமுழ வங்குழல் மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.
1
தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே
பின்னு முன்னுஞ் சிலபேய்க் கணஞ்சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடிப் பூசுவர்
அன்னம் ஆலுந் துறையானும் ஐயாறுடை ஐயனே.
2
கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை
மாறி லாருங்கொள் வாரில்லை மார்பி லணிகலம்
ஏறும் ஏறித் திரிவரிமை யோர்தொழு தேத்தவே
ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.
3
பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
எண்ணின் நல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந் தானும் ஐயாறுடை ஐயனே.
4
வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்
தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி
ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே.
5
எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா
மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.
6
ஓதி யாருமறி வாரில்லை யோதி யுலகெலாஞ்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
ஆதியாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே.
7
குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்
விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே
பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்
அரவ மார்த்துகந் தானும் ஐயாறுடை ஐயனே.
8
உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்
வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்
அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே.
9
மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர்
ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே.
10
கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால்
மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல
மைகொள் கண்டத் தெண்டோள்முக் கணான்கழல் வாழ்த்தவே
ஐயந் தேர்ந்தளிப் பானும்ஐ யாறுடை ஐயனே.
11
பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினைக்
கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.
12
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.32 திருவையாறு - திருவிராகம்
பண் - இந்தளம்
திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே.
1
கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்
சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே.
2
கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே.
3
நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே.
4
வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
நின்றுநட மாடியிடம் நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே.
5
பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே.
6
துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்
மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே.
7
இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்
துரக்கிவர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்
வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே.
8
பருத்துரவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப்
பெருத்துரவ தாயுல கிடந்தவனு மென்றுங்
கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்
வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே.
9
பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தாம்
நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே.
10
வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com